Tuesday, October 02, 2007

சிந்தனைக்கு தீனி

உலகில் சமாதானத்தையும், ஜனநாயகத்தையும் உண்டாக்க வந்துள்ளோம் என்று கச்சை கட்டி வந்தவர்களும், அதற்கு வக்காலத்து வாங்கக் கூடிய அடிவருடிகளும், இஸ்லாத்தை மனம்போன போக்கில் விமர்சிக்கக்கூடிய விமர்சகர்களும் சாப்பிட்டுவிட்டு ஸஹாக்கல் இல்லாமல் தனிமையில் அமர்ந்திருக்க சமயம் கிடைத்தால் சிந்திப்பதற்காகவும், யுத்த வெறி பிடித்து தன் கோரப்பற்களை திறந்தவாறு அழையும் இரத்தக் காட்டேறிகளும், கொஞ்சம் சிந்திப்பதற்காக
யுத்தம் என்றால் யாரும் யாரையும் கொல்லலாம் எப்படியும் கொல்லலாம் என்ற நிலை இந்த நவீன காலத்தில் உருவாக்கப்பட்டு உள்ளது. இனத்தின் பெயரால், ஆதிக்கத்தின் பெயரால், மண்ணின் பெயரால் நடைபெறும் சண்டைகளுக்கு முன்னால் இந்த சண்டைகள் ஒன்றும் அவ்வளவு பெரிய சண்டைகள் அல்ல.
உதாரணத்திற்கு சொல்கின்றேன்: இஸ்லாத்தை நிலைநாட்ட நபி(ஸல்) அவர்களும் சில யுத்தங்களில் கலந்து கொண்டார்கள். இதைப் பற்றி பேராசிரியர் K.S.ராமாகிரிஷ்ணராவ் எழுதிய "இஸ்லாமிய மார்க்கத்தின் திருத்தூதர் முஹம்மத்(ஸல்)" என்ற தலைப்பில் எழுதிய நூலில் இவ்வாறு குறிப்பிடுகின்றார். இறைத்தூதர் யுத்த களத்தின் அணுகுமுறையை முழுக்க மாற்றினார். அரேபிய தீபகற்பம் முழுக்க அவர் ஆளுகையின் கீழ் வந்தபோது, அவர் வாழ்நாளில் ஏற்பட்ட எல்லா போர்களிலும் உயிரிழந்தோர் எண்ணிக்கை ஒரு சில நூறுகளை தாண்டவேயில்லை. அவர் அரேபியாவின் காட்டுமிராண்டிகளுக்கு தொழக்கற்றுக் கொடுத்தார். தனியாகவல்ல யுத்தத்தின் ஆரவாரங்களுக்கு நடுவேயும், கூட்டமாகத் தொழக் கற்றுத் தந்தார். எப்பொழுதெல்லாம் தொழுகை நேரம் வருகிறதோ அப்பொழுதெல்லாம் தொழுகையை கைவிடக்கூடாது ஏன் ஒத்திப் போடக்கூடாது என்று அவர் போதித்தார். படைகளில் ஒரு பிரிவினர் தொழுது கொண்டிருக்கும் பொழுது மற்றொரு பிரிவினர் போரிட்டுக் கொண்டிருப்பார்கள்.
ஒரு பிரிவினர் தொழுகையை முடித்த பிறகு போர் செய்ய செல்வார்கள். காட்டுமிராண்டித்தனம் நிலவிய காலத்தில் யுத்தங்களே மனிதத் தன்மை உடையதாக ஆக்கப்பட்டது. கொள்ளையடித்தல், ஏமாற்றுதல், வாக்கு முறித்தலுக்கு எதிராக கடுமையான உத்தரவுகள் வெளியிடப்பட்டன. குழந்தைகள், பெண்கள், வயதான ஆண்களை காயப்படுத்தக்கூடாது கொல்லக்கூடாது என்று கட்ட்ளைகள் வெளியிடப்பட்டன. பேரிச்ச மரத்தை, பல மரங்களை வெட்டக்கூடாது என்றும், மத குருமார்களை அவமானப்படுத்தக் கூடாது என்றும் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. மக்காவை அவர் கைப்பற்றியபோது அவரது அதிகாரம் உச்சகட்டத்தில் இருந்தது. எந்த நகரம் அவரது போதனைகளை கேட்க மறுத்ததோ, எந்த நகரம் அவரையும் அவரை பின்பற்றுவோரையும் பெரும் சித்திரவதை செய்ததோ, எந்த நகரம் அவரையும் அவரது ஆதரவாளர்களையும் துரத்தி அடித்ததோ, 200 மைல்களுக்கு அப்பால் ஒரு இடத்தில் அடைக்கலம் புகுந்திருந்த நிலையிலும் இடையறாத பகையில் தாக்குதல்களை தொடுத்ததோ, அந்த நகரம் இப்பொழுது அவரது காலடியில் கிடந்தது.
தன்மீதும் தன்னை பின்பற்றுவோர் மீதும் இழைக்கப்பட்ட கொடுமைகளுக்காக யுத்த விதிகளின்படி அவர் பழி தீர்த்துக்கொண்டிருக்கலாம். ஆனால் அவர் என்ன செய்தார்? முஹம்மதுவின் இதயத்திலிருந்து அன்பும் இரக்கமும் பெருக அவர் "உங்கள் மீது எந்தப் பழிவாங்கும் நடவடிக்கையும் இல்லை" என்று கூறினார். தற்காப்புக்காக மனித உள்ளங்களை ஒன்று படுத்த யுத்தத்தை அவர் ஏன் அனுமதித்தார் என்பதற்கான முக்கியமான காரணங்களில் இதுவும் ஒன்றாகும். இந்த நோக்கம் நிறைவேறிய பொழுது அவர் தன்னுடைய மோசமான எதிரிகளைக்கூட மன்னித்துவிட்டார். தன்னுடைய சிறிய தந்தையார் ஹம்ஸாவை கொன்றவர்கள் அவரது உயிரற்ற உடலை கீறி ஈரலை வெளியே எடுத்து கடித்த மிகவும் கொடூரமான எதிரிகளைக் கூட அவர் மன்னித்துவிட்டார். உலகம் தழுவிய சகோதரத்துவம், மனித குலத்தின் சமத்துவம், போதித்த கொள்கைகள் மனித இனத்தை மேம்படுத்த அவர் தந்த போதனைகளில் மிக முக்கிய இடத்தை வகிக்கின்றன. எல்லா பெரிய மதங்களும் அந்தக் கொள்கைகளை போதித்துள்ளன. ஆனால் இறைத்தூதர் முஹம்மது மட்டும்தான் அந்தக் கொள்கைகளை உண்மையில் நடைமுறைப்படுத்தியவர் ஆவார். அதன் மதிப்பு எதிர்காலத்தில் சர்வதேச உள்ளுணர்வு முழுக்க விழித்தெழும் வேளையில் முழுமையாக உணரப்படும். இன வேற்றுமைகள் மறையும். வலிமை வாய்ந்த உலக சகோதரத்துவக் கொள்கை நிலை பெறும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.