Friday, August 10, 2007

முஸ்லிம்கள் செய்ய வேண்டியது என்ன?

டாக்டர் ஷஹீத் செய்யித் குதுப் அவர்கள் எழுதிய இஸ்லாமிய எழுச்சியின் மைல்கற்கள் என்ற புத்தகத்தில் இருந்து என்னை மிகவும் வேதனைப்படுத்திய ஒரு சிறிய பகுதியை மட்டும் இங்கே தருகின்றேன் இது தமிழ் இஸ்லாம் தளத்தில் இருந்து எடுத்தது நன்றி: தமிழ் இஸ்லாம் இஸ்லாம் கொள்கை அளவில் ஈடு இணையற்றது. அதனால் அவனியில் தானாகவே நிலைபெற்றிடும் என்ற எண்ணத்தில் முஸ்லிம்கள் செயலிழந்து நின்றிடக் கூடாது. இஸ்லாம் அதனை ஏற்றுக் கொண்டோர் வாழ்க்கையில் செயலில் மிளிர்ந்திட வேண்டும். இஸ்லாம் காட்டும் வழிகளை வையகத்தில் வழிகாட்டியாகக் கொண்டு வாழும் ஓர் சமுதாயம் இருக்கின்றது. இதைத் தங்கள் நித்திய வாழ்க்கையை விளக்கிடும் வகையில் முஸ்லிம்கள் வாழ்ந்து காட்டிட வேண்டும். வனப்பான கொள்கை என்பதற்காக எந்தக் கொள்கையையும் அடுத்தவர்கள் ஏற்றிட முன்வர மாட்டார்கள். அவர்கள் அந்தக் கொள்கையை ஏற்றுக் கொண்டவர்களின் வாழ்க்கை எப்படி இருக்கின்றது எனப்பார்ப்பார்கள். இன்றைய உலகில் மனிதன் எதையும் கூர்ந்து கவனிப்பவனாக இருக்கின்றான். எதையும் ஆழ்ந்து சிந்திப்பவனாக இருக்கின்றான். எதையும் நடைமுறையில் கண்டாலன்றி நம்ப மாட்டான். நடைமுறை வாழ்க்கையைப் பொறுத்தவரை முஸ்லிம்கள் இஸ்லாத்திலிருந்து வெகுதூரம் விலகிச் சென்றுவிட்டார்கள். பல நூற்றாண்டுகள் இப்படியே வாழ்ந்து விட்டார்கள். இஸ்லாத்தை ஏற்று வாழும் முஸ்லிம்கள் எனப்படுவோர் ஏதோ ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் வாழ்வோர் எனக் குறிப்பிடப்படுவதில்லை. அல்லது இன்ன காலகட்டத்தில் வாழ்ந்தவர்களுக்குப் பெயர் தான் முஸ்லிம்கள் எனக் குறிப்பிடப்படுவதுமில்லை. அது இஸ்லாம் என்ற கொள்கையை யதார்த்த வாழ்க்கையில் ஏற்று எல்லா நிலைகளிலேயும் அதை நடைமுறைப்படுத்தி வாழும் ஓர் சமுதாயத்தின் பெயர். ஆகவே இந்த சமுதாயம் எந்த அளவிற்கு இஸ்லம் சொன்ன கொள்கைகளை எடுத்து வாழ்கின்றது என்பதைக் கொண்டே அந்தக் கொள்கையின் பலமும் பலவீனமும் நிர்ணயிக்கப்படுகின்றது. · எந்தச் சமுதாயத்தின் சிந்தனை முற்றாக இஸ்லாத்தின் அடிப்படையில் அமைந்திருக்கின்றதோ · எந்தச் சமுதாயத்தின் வாழ்க்கை முற்றாக இஸ்லாத்தின் வழிகாட்டுதலின் வழி அமைந்திருக்கின்றதோ · எந்தச் சமுதாயத்தின் இங்கிதங்கள் இஸ்லாத்தின் அடிப்படையில் அமைந்திருக்கின்றதோ · எந்தச் சமுதாயத்தில் வழக்குகளும் பிணக்குகளும் அல்லாஹ்வும் அவனுடைய திருத்தூதரும் வழங்கியதைக் கொண்டு தீர்க்கப்படுகின்றனவோ · எந்தச் சமுதாயத்தின் கட்டுப்பாடுகள் இஸ்லாத்தின் அடிப்படையில் அமைந்திருக்கின்றனவோ · எந்தச் சமுதாயத்தின் இன்பமும் துன்பமும் இஸ்லாத்தின் அடிப்படையில் அமைந்திருக்கின்றனவோ - அந்தச் சமுதாயமே இஸ்லாமிய சமுதாயம். இந்தப் பொன்னரிய வழிகாட்டுதலை முஸ்லிம்கள் புறக்கணித்து வாழ்ந்து வந்தால் நிச்சயமாக இறைவனின் தூதர் (ஸல்) அவர்கள் உங்கள் மீது சாட்சியாக இருக்கின்றார்கள் எச்சரிக்கை. முஸ்லிம் சமுதாயம் அதனுடைய அசல் வடிவை மீண்டும் பெற வேண்டும். அப்போது மட்டுமே அது உலகை வழி நடத்தும் பொறுப்பைப் பெற முடியும். அப்போது மட்டுமே அந்தப் பொறுப்பை நிறைவேற்றிடும் தகுதியைப் பெற்றிட முடியும். பல நூற்றாண்டுகளாக தங்கள் கொள்கையிலே இருந்து தடம் மாறிப் போய் மனிதர்கள் கண்டெடுத்த வழிமுறைகளிலும் பழக்கவழக்கங்களிலும் தங்களை புதைத்துக் கொண்ட முஸ்லிம் சமுதாயத்தை மீட்க வேண்டும். தனக்குக் கொஞ்சமும் சம்பந்தமில்லாத இஸ்லாத்தோடு எந்த விதத்திலேயும் தொடர்பில்லாத கொள்கைகளின் அழுத்தத்தால் தனதின் தன்மை(களை)யை இழந்து நிற்கும் இந்த முஸ்லிம் சமுதாயத்தைப் புனரமைத்துப் புடம் போட வேண்டும். இப்படி இஸ்லாத்திற்கு வெகு தூரத்தில் வாழ்ந்து கொண்டே நாங்கள் இஸ்லாமியப் பெருங்குடியினர் எனச் சொல்லிக் கொண்டிருக்கின்றனர் முஸ்லிம்கள். இஸ்லாத்தை விட்டுப் பிரிந்து விலகி வாழ ஆரம்பித்த காலத்திலே தான் மேலைநாடுகள் விஞ்ஞானத்தில் சாகசங்களை நிகழ்த்தி உலகில் விரிந்து பரந்து உலகத் தலைமையைக் கைப்பற்றிக் கொண்டன. கிடைக்கவியலாத இந்த இணையற்ற வழிகாட்டுதலாம் இஸ்லாத்தை விட்டு வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த முஸ்லிம் சமுதாயத்தைச் சீரமைப்பதற்கும் அது உலகத் தலைமையை ஏற்பதற்கும் இடையே அகன்றதோர் இடைவெளி இருக்கின்றது. என்றாலும் முஸ்லிம்களைப் புனரமைப்பது என்பது அவசியம் நிறைவேற்றியாக வேண்டியதொரு கடமை. அதற்கான முயற்சிகளை முறையாக உடனேயே ஆரம்பித்தாக வேண்டும். இந்த முயற்சிகளை ஆரம்பிப்பதற்கு முன்னால் நாம் எந்த அடிப்படைகளில் இந்தச் சீரமைப்பை ஆரம்பிக்க வேண்டும் என்பதைத் தெளிவாகத் தெரிந்திட வேண்டும். ஏனெனில் நாம் எடுத்த எடுப்பிலேயே தவறுகளைச் செய்திடக்கூடாது. அறிவுத் துறையில் விஞ்ஞான வானத்தில் அதிசயங்களை இஸ்லாமிய சமுதாயம் செய்து காட்டி மேலைநாடுகளை தலைகுனியச் செய்திட வேண்டும் என்றில்லை. இதை இப்போது இஸ்லாமிய சமுதாயம் செய்திடவும் முடியாது. இப்படியொரு போட்டியில் இறங்கியாக வேண்டும் என்பது அவசியமும் இல்லை. ஏனெனில் இந்தப் போட்டியில் இறங்கி அதில் வென்றால் தான் உலகத் தலைமையைக் கைப்பற்றலாம் என்றொரு நிலை இங்கே இப்போது இல்லை. இப்படிச் சொல்லி விடுவதால் நாம் அறிவுத்துறையைப் பற்றிக் கவலைப்படாமல் இருந்திடலாம் என்றில்லை. அந்தத் துறையில் அமிழ்ந்திருக்கும் அழிவு சக்திகளை அப்புறப்படுத்தி அந்தத் துறையில் இன்னும் பல அதிசயங்களை நிகழ்த்தி மனித இனம் வாழ வழிகாட்டிட வேண்டும். எனினும் அதற்கு முன் இன்றைய உலகம் தடந்தெறியாமல் தட்டுத் தடுமாறி நிற்கின்றதே அதனை நிலைபெறச் செய்து நிலையாக வாழ வைக்கும் உன்னதமான மாண்புமிக்க பண்பாடு, கலாச்சாரம், ஆன்மீக வழிகாட்டுதல் நம்மிடமிருக்கின்றன. இவற்றைச் செயல்படுத்திக் காட்டிட வேண்டியது அதைவிட அவசர அவசியம். தாடிவைக்கக் கூட பயப்படுகின்ற, உடையில் நவநாகரீகத்தை (இஸ்லாமிய வரம்பை மீறி) விரும்பக்கூடிய தனக்கு திருமணம் என்றால் கொள்கையை மறந்து பொற்றோர்கள் நிர்பந்தத்தினால்தான் நான் வரதட்சணை வாங்கினேன் என்று வெக்கம் இல்லாமல் சொல்லக்கூடியவர்கள் சற்று சிந்தித்துப்பார்க்க வேண்டும். உலகில் அற்பமான சாதாரண விஷயத்திற்கே இப்படி சொன்னால் இங்கே பாருங்கள். இதற்கெல்லாம் நாம் இன்னும் கொள்கை ரீதியாகவும், கலாச்சார ரீதியாகவும், வக்குவப்பட வேண்டியுள்ளது மட்ட்டுமல்ல நிறைய தியாகங்களுக்கும் நாம் இன்னும் தயாராகவேண்டும் என்பதையும் உணரவேண்டும்.