அண்ணாத்தே நம்ப தமிழுலே கத்தி எடுத்தவன் கத்தியாலே சாவான்னு ஒரு பழமொழி உண்டு அது எந்த அளவுக்கு உண்மென்றது இதெ படிச்சா தெரியும் என்ன செய்ய போங்க அருண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய்......
உதய் மேனன்...
ஜே.பி. மார்கன் எனும் பன்னாட்டு நிறுவனத்தில் அமெரிக்காவில் மிக உயர்ந்த பதவி வகிப்பவர். கடந்த வாரம் மேனன் தனது நிறைமாத கார்ப்பிணி மனைவியின் ஆசையைப் பூர்த்தி செய்வதற்காக அவரை அழைத்துக்கொண்டு, தன் கைக்குழந்தையையும் எடுத்துக் கொண்டு, நியூயார்க்கில் பிரபலமான 'பிராட்வே ஷோ' எனும் மியூஸிகல் நிகழ்ச்சிக்குச் சென்றார்.
கௌண்ட்டரில் மேடைக்கு அருகே ஸீட் வேண்டும் என்று கேட்ட உதய் மேனனை 'ஒரு நிமிடம்' என்று காத்திருக்கச் சொல்லிவிட்டு, கௌண்ட்டரில் இருந்த பெண்மணி உள்ளே சென்றாள். தான் கேட்டபடி டிக்கெட் கொடுக்க யாரிடமோ அனுமதி வாங்கப் போயிருக்கிறாள் என்று பார்த்தபோது, அவள் வந்தது நான்கு போலீஸ்காரர்களுடன்.
'ஹேண்ட்ஸ் அப்' என்று கூச்சலிட்டபடியே மெஷின் கன் சகிதம் வந்த நியூயார்க் போலீஸார், மேனனைக் கீழே புரட்டித் தள்ளி கைகளை முதுகுக்குப் பின்னால் வைத்து விலங்கு போட்டனர். மனைவியும், கைக்குழந்தையும் அலறியபடியிருக்க, தியேட்டரில் இருந்த நூற்றுக்கணக்கான மக்கள் ஒடிவந்து பார்த்தனர். மேனனை சட்டை பாண்ட் கழற்றி சோதித்த போலீஸார் கைகளில் கிடைத்தது, அவர் கம்பெனியின் அடையாள அட்டையும், பர்ஸும்தான். அதைப் பார்த்தபிறகு அவர் முகத்தில் அவற்றை வீசியெறிந்த போலீஸார், விலங்கை கழற்றிவிட்டனர்.
கௌண்ட்டர் பெண்மணி அவரை மனித வெடிகுண்டு என்று தவறாக போலீஸில் சொன்னதுதான் இத்தனை கொடுமைக்கும் காரணம்.
கண்களில் நீர் வடிய, ''இருபது வருடமாக நியூயார்க்கில் வசிக்கிறேன். திடீரென்று என்னை ஒரு குற்றவாளியாகப் பார்த்துவிட்டார்களே! இந்தியாவிலிருந்து வந்தாலும், அமெரிக்க குடியுரிமை பெற்ற எனக்கு இதுதானே தாய்நாடு! தாயே வேண்டாம்'' என்கிறார் உதய் மேனன்.
சுக்விந்தர் சிங்...
ஒரு இளம் தொழிலதிபர். தனது கடுமையான உழைப்பினால் இளம் வயதிலேயே கோடிக்கணக்கில் சம்பாதித்தவர். மெர்சிடைஸ் பென்ஸ் கார், பத்து ஏக்கர் வீடு என்று அமெரிக்காவில் வாழ்பவர்.
கடந்த வாரம் இவர் வேலைநிமித்தமாக விமானத்தில் பயணம் செய்ய வேண்டியிருந்தது. டிக்கெட் கௌண்ட்டரில், முதல் வகுப்பு டிக்கெட் கேட்டவர், 'காலை நீட்டிக்கொண்டு சௌகரியமாக உட்கார்ந்து பயணம் செய்யும் வகையில் முதல் வரிசையில் ஸீட் இருந்தால் நன்றாக இருக்கும்' என்று கேட்டிருக்கிறார்.
அது பைலட்கள் அமரும் 'காக்பிட்'டுக்கு மிக அருகேயுள்ள ஸீட். சுக்விந்தர் சிங்கின் இந்த கோரிக்கையுடன், அவரை ஏற இறங்கப் பார்த்தபடி எழுந்து போனார் கௌண்ட்டர் நபர். திடீரென்று அதிரடிப் படையினர் ஓடிவந்து அவரை மடக்கி, டர்பனை கழற்றச் சொன்னார்கள். 'ஸாரி, அது என் மதத்துக்கு விரோதமானது' என்று பணிவாக அவர் கூறும்போதே டர்பனைப் பிடுங்கி அவருடைய நீண்ட தலைமுடிக்குள் வெடிகுண்டு இருக்கிறதா என்று சோதனை போட தொடங்கினார்கள்.
ஆறடி உயரக் கூந்தல் அலைபுரள... அமெரிக்க அதிரடிப் படையினர் மிரண்டுபோய், 'ஏய்! நீ ஆணா, பெண்ணா? அதைச் சொல் முதலில்' என்று மிரட்டியபடியே, மோப்ப நாயை வரவழைத்தனர். அவர் பெட்டிகளைச் சோதித்து முடித்துவிட்டு, தப்பாக ஏதும் இல்லை என்று புரிந்துகொண்டு, 'ஏன் மேன்.. ஏன் இவ்வளவு பெரிய தலைப்பாகை கட்டி எங்கள் உயிரை எடுக்கிறாய்? உடனே நல்ல சலூனாகப் பார்த்துப் போ' என்றபடி புடவை நீளத்துக்கு இருக்கும் டர்பனை அவர் முகத்தில் விட்டெறிந்துவிட்டு நகர்ந்தார்கள்.
இந்தியா, சீக்கிய மதம் இது பற்றியெல்லாம் அதிகம் அறிந்து வைத்திராத அமெரிக்கப் பயணிகள் பலரும் சுக்விந்தர் சிங்கை ஏதோ ஒஸாமா பின் லேடனைப் பார்ப்பது போல் பார்க்கவும், கூனிக்குறுகிப் போன சுக்விந்தர், கவிந்த தலை நிமிராமல் வீடு போய்ச் சேர்ந்தார். இப்போது மன அழுத்தம் மற்றும் பிளட் பிரஷருக்கு வைத்தியம் செய்துகொள்கிறார்.
ஹைதர் ரிஸ்வி..
இவர் இந்தியர் அல்ல, பாகிஸ்தானி. இவர் ஒரு ஜர்னலிஸ்ட்... ஐக்கிய நாடுகள் சபையின் அங்கீகாரம் பெற்ற ஜர்னலிஸ்ட். வளர்த்தியாகத் தாடி வைத்திருக்கும் அவரை சூப்பர் மார்க்கெட்டில் 'ஒஸாமா பின் லேடனின் கையாள்' என்று கூக்குரலிட்டபடி சூழ்ந்துகொண்ட சிலர், நையப் புடைந்துவிட்டனர். பற்கள் உடைந்து, எலும்பு முறிவுடன் ஜஹதர் ரிஸ்வி இப்போது நியூயார்க் ஆஸ்பத்திரியில்.
ஆயிஷா பேகம்..
இந்தியாவைச் சேர்ந்த பட்டதாரி இவர். பர்தா போட்டுதான் அமெரிக்காவில் எங்கும் வெளியே போவார். சமீபத்தில் சில இளைஞர்கள் அவர் பர்தாவை கழற்றி சில்மிஷம் செய்தார்கள். இவ்வளவையும் போலீஸார் பார்த்துக்கொண்டு சும்மாயிருந்தனர். மனது உடைந்துபோன ஆயிஷா தற்கொலை முயற்சியில் இறங்கி, அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். வேலைக்குப் போகாமல் இப்போது வீட்டில் முடங்கிக் கிடக்கிறார்.
அபிஷேக்..
பத்தே வயதான பள்ளி மாணவன். அமெரிக்காவில் பிறந்ததால் இந்த நாட்டுக் குடிமகன். பள்ளியில் மற்ற பசங்கள் இந்தியாவைச் சேர்ந்த இவனை 'டெரரிஸ்ட்' என்று கேலி செய்யவே, அவமானம் ப்ளஸ் பயம் பெருக்கெடுக்க.. பள்ளிக்குப் போவதையே நிறுத்திக் கொண்டு ஜுரத்தில் படுத்துக் கிடக்கிறான்.
இது மேற்சொன்னவர்களுக்கு மட்டும் நேர்ந்த அனுபவமல்ல.. அமெரிக்காவில் தினம்தினம் சகஜமாகிக் கொண்டிருக்கிறது இந்த சித்ரவதை.
ரயிலில், பஸ்ஸில், நடுத்தெருவில் திடீர் திடீரென தெற்காசிய நாட்டுப் பூர்வீகம் கொண்டவர்களையும் அந்த நாடுகளிலிருந்து சமீபத்தில் அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்தவர்களையும் இப்படிக் கொடுமைப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் அமெரிக்கர்கள். சொல்லப் போனால், பிரௌன் கலருடைய அனைத்து ஆசாமிகளுக்குமே இப்படிச் சோதனைதான். போலீஸாரின் கண்களுக்கு இவர்கள் அனைவரும் டெரரிஸ்ட்டுகள்தான்.
விமானங்களில் நீண்ட நாட்களுக்கு முன்பே புக் செய்து, 'கன்ஃபர்ம்டு' டிக்கெட் வாங்கி ஏறி உட்காரும் தெற்காசியர்கள் பலர், விமானியினால் இறக்கி விடப்படுகிறார்கள். கேட்டால், ''உங்களுடன் டிராவல் செய்ய மற்ற பயணிகள் (வெள்ளையர்கள்) பயப்படுகிறார்கள். ஸாரி, பணத்தை வாபஸ் தருகிறோம்'' என்பதே பதில். பயணி இறங்க மறுத்தால், அந்த விமானி விமானத்தை எடுக்காமல் உடல்நலக் குறைவு என்று லீவில் போய்விடுகிறார். விமான கம்பெனிகளும் நஷ்டத்துக்குப் பயந்து பயணியை இறக்கிவிடுகின்றன.
முந்நூறு ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிறவெறி ஆதிக்க கற்காலத்தை நோக்கி அமெரிக்கா மறுபடி முன்னேறிக் கொண்டிருக்கிறது என்பதுதான் இன்றைய நிலைமை. தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு நியூயார்க் இலக்கான பின்னர், யாரைக் கண்டாலும் பயந்து நடுங்குவது ஒருபக்கம் என்றால், 'எங்கள் நாட்டில் ஒண்டிப் பிழைக்க வந்துவிட்டு, எங்களுக்கே அழிவு உண்டாக்கப் பார்க்கிறீர்களா' என்ற கண்மூடித்தனமான ஆத்திரமும் அவர்களது கண்களை மறைக்கத் துவங்கியிருக்கிறது.
தென்னாப்பிரிக்காவில் நடந்த நிற வெறித் தாக்குதல் உட்பட, உலகின் எந்த மூலையில் மனித உரிமைகள் மீறப்பட்டாலும் ஓடோடி வந்து அதைக் கண்டிக்கும் அமெரிக்கா, இப்போது தானே நிற வெறி ஆதிக்கத்துக்கு ஆட்பட்டுக் கொண்டிருக்கிறது.
நியூயார்க் ரயில்களில் தெற்காசியர்களின் ஸீட்டுக்குப் பக்கத்து ஸீட்டில் அமரக்கூட பயப்படும் வெள்ளையர்களைப் பார்க்க முடிகிறது. அச்சத்தில் உருவான தீண்டாமை!
இதேபோல், நேற்றுவரை தெற்காசியர்கள் நடத்திவரும் ஓட்டல்களுக்கும் கடைகளுக்கும் விரும்பிப் போய்க் கொண்டிருந்த அமெரிக்கர்கள், இப்போது காத தூரம் ஓடுகிறார்கள்.
அமெரிக்காவில் தனி நபர் வருமானம் என்று பார்த்தால் சீனர்கள், யூதர்கள் மற்றும் இந்தியர்களுக்கே அதிகம். குறிப்பாக இந்தியாவிலிருந்து கம்ப்யூட்டர் துறையினர், டாக்டர்கள், விஞ்ஞானிகள் என்று மெத்தப் படித்தவர்கள் இங்கே குடியுரிமை பெற்று, மற்ற இனத்தவரைவிட அதிகம் சம்பாதிக்கிறார்கள். பெரிய வீடுகளையும், புதிய கார்களையும் இந்தியர்கள் வாங்கும்போது, மற்றவர்களின் கண்களை இது குத்துகிறது.
டெக்ஸாஸ் மாநிலத்தில் கடந்த ஆண்டு சில கம்ப்யூட்டர் நிபுணர்களைக் கைதுசெய்து சிறையில் அடைத்தபோது, குடியுரிமை அதிகாரிகள் பொறாமை தாளாமல் சில வார்த்தைகளை வெளியே விட்டனர்.
''நாங்கள் இருபது வருடமாக வேலை செய்தும்கூட, வருடத்துக்கு ஐம்பதாயிரம் டாலர் சம்பளம் வாங்க முடியவில்லை. நேற்று வந்த அரை டிராயர் பசங்கள் (இளைஞர்கள்) இங்கு பணத்தைக் குவிக்கிறார்களே..'' என்றனர் அவர்கள்.
தற்போது இந்த உணர்வும் சேர்ந்து இந்தியர்களுக்கு எதிராகக் கொழுந்து விட்டு எரியத் துவங்கியுள்ளது. இதையெல்லாம் கண்டு மனம் புழுங்கிப் போயிருக்கும் அமெரிக்க வாழ் இந்தியர்களில் சிலர்,
''அமெரிக்கா என்னவோ இவர்கள் பாட்டன் வீட்டுச் சொத்து போல அனுபவிக்கிறார்கள். இது யாருடைய பூமியும் அல்ல. இது மொத்தமும் குடியேறிகளின் நாடுதான். இந்த நாட்டின் வம்சாவளியினரான சிவப்பிந்தியர்களைக் கொன்றுகுவித்தும், தனியாக ஒதுக்கி வைத்தும்தான் இந்த வெள்ளையர்கள் அமெரிக்காவைப் பிடித்து வைத்திருக்கிறார்கள். நாம் நேற்று வந்தவர்கள் என்றால், இவர்கள் ஐரோப்பாவில் இருந்து முந்தாநாள் வந்து இடத்தைப் பிடித்தவர் கள்தானே'' என்று பொரும ஆரம்பித்து இருக்கிறார்கள்.
நன்றி ஜூனியர் விகடன்
நியூயார்க்கிலிருந்து
பிரகாஷ் எம். ஸ்வாமி