Thursday, December 20, 2007

இந்தியாவை என்ன நினைத்தனர்

அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் நச்சுத்தன்மை படைத்த கழிவுப்பொருட்களை கொட்டும் இடமாக இந்தியாவைக் கருதுகின்றனவா என்ற கேள்வி இப்போது மீண்டும் எழுந்திருக்கின்றது. காகிதம் தயாரிக்க பயன்படுத்தப்படும் கழிவுப்பொருட்கள் என்று கூறி கேரள மாநிலம் கொச்சியில் ஒரு தனியார் நிறுவனம் இறக்குமதிசெய்த சரக்குப்பெட்டகங்களை சோதித்துப்பார்த்தபோது, 60 டன் பொருட்களில் ஏறத்தாழ 40 டன்கள், மருத்துவமனை மற்றும் இயந்திரங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை கழிவுகளாக இருந்ததாக நேற்று முன்தினம் அம்மாநில நல்வாழ்வுத்துறை அமைச்சர் ஸ்ரீமதி செய்தியாளர்களிடம் கூறியிருந்தார்.வந்த சரக்குப்பெட்டகங்கள் திருப்பி அனுப்பப்படுவது மட்டுமல்ல, சம்பந்தப்பட்டவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரித்திருந்தார். இதனிடையே மத்திய நல்வாழ்வுத்துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ் இவ்வாறு ஆபத்தான கழிவுப்பொருட்கள் இந்தியாவுககு அனுப்பப்படுவதற்கு கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும் சம்பவம் பற்றி ஆய்வுசெய்து விவரங்களை திரட்டி பின்னர் அரசாங்க மட்டத்தில் நடவடிக்கை எடுககப்படும் எனவும் அவர் தெரிவித்திருக்கிறார். குஜராத் மாநிலத்தில், மேலை நாடுகளில் ஏற்றுக்கொள்ளப்படாத பழைய கப்பல் உடைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு, பல்வேறு நச்சுப்பொருட்களை உள்வாங்கி, தொழிலாளர்கள் பல்வேறு நோய்களால் பீடிககப்படுவது குறித்து அடிக்கடி இந்திய ஊடகங்களில் செய்திகள் வெளியாவது உண்டு. ஓரிரு சந்தர்ப்பங்களில் அத்தகைய கப்பல்கள் திருப்பி அனுப்பட்பட்டாலும் அத்தொழில் தொடரவே செய்கிறது. ஆனால் காகிதக் கழிவென கூறி ஆபத்தான மருத்துவமனை கழிவுப்பொருட்களை அனுப்பிவைப்பது இப்போதுதான் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. சுற்றுச்சூழல் தூய்மை பற்றிய விழிப்புணர்வு அதிகரித்திருக்கும் நிலையில், மேலை நாட்டு நிறுவனங்கள் நச்சுத்தன்மைபடைத்த இயந்திர தொழிற்சாலை அல்லது மருத்துவமனை கழிவுகளை இந்தியா உள்ளிட்ட பல்வேறு வளரும் நாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக கூறுகிறார் சென்னையைச் சேர்ந்த சுற்றுப்புறச்சுழல் ஆர்வலர் நித்தியானந்தன் ஜெயராமன்.

Tuesday, October 02, 2007

சிந்தனைக்கு தீனி

உலகில் சமாதானத்தையும், ஜனநாயகத்தையும் உண்டாக்க வந்துள்ளோம் என்று கச்சை கட்டி வந்தவர்களும், அதற்கு வக்காலத்து வாங்கக் கூடிய அடிவருடிகளும், இஸ்லாத்தை மனம்போன போக்கில் விமர்சிக்கக்கூடிய விமர்சகர்களும் சாப்பிட்டுவிட்டு ஸஹாக்கல் இல்லாமல் தனிமையில் அமர்ந்திருக்க சமயம் கிடைத்தால் சிந்திப்பதற்காகவும், யுத்த வெறி பிடித்து தன் கோரப்பற்களை திறந்தவாறு அழையும் இரத்தக் காட்டேறிகளும், கொஞ்சம் சிந்திப்பதற்காக
யுத்தம் என்றால் யாரும் யாரையும் கொல்லலாம் எப்படியும் கொல்லலாம் என்ற நிலை இந்த நவீன காலத்தில் உருவாக்கப்பட்டு உள்ளது. இனத்தின் பெயரால், ஆதிக்கத்தின் பெயரால், மண்ணின் பெயரால் நடைபெறும் சண்டைகளுக்கு முன்னால் இந்த சண்டைகள் ஒன்றும் அவ்வளவு பெரிய சண்டைகள் அல்ல.
உதாரணத்திற்கு சொல்கின்றேன்: இஸ்லாத்தை நிலைநாட்ட நபி(ஸல்) அவர்களும் சில யுத்தங்களில் கலந்து கொண்டார்கள். இதைப் பற்றி பேராசிரியர் K.S.ராமாகிரிஷ்ணராவ் எழுதிய "இஸ்லாமிய மார்க்கத்தின் திருத்தூதர் முஹம்மத்(ஸல்)" என்ற தலைப்பில் எழுதிய நூலில் இவ்வாறு குறிப்பிடுகின்றார். இறைத்தூதர் யுத்த களத்தின் அணுகுமுறையை முழுக்க மாற்றினார். அரேபிய தீபகற்பம் முழுக்க அவர் ஆளுகையின் கீழ் வந்தபோது, அவர் வாழ்நாளில் ஏற்பட்ட எல்லா போர்களிலும் உயிரிழந்தோர் எண்ணிக்கை ஒரு சில நூறுகளை தாண்டவேயில்லை. அவர் அரேபியாவின் காட்டுமிராண்டிகளுக்கு தொழக்கற்றுக் கொடுத்தார். தனியாகவல்ல யுத்தத்தின் ஆரவாரங்களுக்கு நடுவேயும், கூட்டமாகத் தொழக் கற்றுத் தந்தார். எப்பொழுதெல்லாம் தொழுகை நேரம் வருகிறதோ அப்பொழுதெல்லாம் தொழுகையை கைவிடக்கூடாது ஏன் ஒத்திப் போடக்கூடாது என்று அவர் போதித்தார். படைகளில் ஒரு பிரிவினர் தொழுது கொண்டிருக்கும் பொழுது மற்றொரு பிரிவினர் போரிட்டுக் கொண்டிருப்பார்கள்.
ஒரு பிரிவினர் தொழுகையை முடித்த பிறகு போர் செய்ய செல்வார்கள். காட்டுமிராண்டித்தனம் நிலவிய காலத்தில் யுத்தங்களே மனிதத் தன்மை உடையதாக ஆக்கப்பட்டது. கொள்ளையடித்தல், ஏமாற்றுதல், வாக்கு முறித்தலுக்கு எதிராக கடுமையான உத்தரவுகள் வெளியிடப்பட்டன. குழந்தைகள், பெண்கள், வயதான ஆண்களை காயப்படுத்தக்கூடாது கொல்லக்கூடாது என்று கட்ட்ளைகள் வெளியிடப்பட்டன. பேரிச்ச மரத்தை, பல மரங்களை வெட்டக்கூடாது என்றும், மத குருமார்களை அவமானப்படுத்தக் கூடாது என்றும் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. மக்காவை அவர் கைப்பற்றியபோது அவரது அதிகாரம் உச்சகட்டத்தில் இருந்தது. எந்த நகரம் அவரது போதனைகளை கேட்க மறுத்ததோ, எந்த நகரம் அவரையும் அவரை பின்பற்றுவோரையும் பெரும் சித்திரவதை செய்ததோ, எந்த நகரம் அவரையும் அவரது ஆதரவாளர்களையும் துரத்தி அடித்ததோ, 200 மைல்களுக்கு அப்பால் ஒரு இடத்தில் அடைக்கலம் புகுந்திருந்த நிலையிலும் இடையறாத பகையில் தாக்குதல்களை தொடுத்ததோ, அந்த நகரம் இப்பொழுது அவரது காலடியில் கிடந்தது.
தன்மீதும் தன்னை பின்பற்றுவோர் மீதும் இழைக்கப்பட்ட கொடுமைகளுக்காக யுத்த விதிகளின்படி அவர் பழி தீர்த்துக்கொண்டிருக்கலாம். ஆனால் அவர் என்ன செய்தார்? முஹம்மதுவின் இதயத்திலிருந்து அன்பும் இரக்கமும் பெருக அவர் "உங்கள் மீது எந்தப் பழிவாங்கும் நடவடிக்கையும் இல்லை" என்று கூறினார். தற்காப்புக்காக மனித உள்ளங்களை ஒன்று படுத்த யுத்தத்தை அவர் ஏன் அனுமதித்தார் என்பதற்கான முக்கியமான காரணங்களில் இதுவும் ஒன்றாகும். இந்த நோக்கம் நிறைவேறிய பொழுது அவர் தன்னுடைய மோசமான எதிரிகளைக்கூட மன்னித்துவிட்டார். தன்னுடைய சிறிய தந்தையார் ஹம்ஸாவை கொன்றவர்கள் அவரது உயிரற்ற உடலை கீறி ஈரலை வெளியே எடுத்து கடித்த மிகவும் கொடூரமான எதிரிகளைக் கூட அவர் மன்னித்துவிட்டார். உலகம் தழுவிய சகோதரத்துவம், மனித குலத்தின் சமத்துவம், போதித்த கொள்கைகள் மனித இனத்தை மேம்படுத்த அவர் தந்த போதனைகளில் மிக முக்கிய இடத்தை வகிக்கின்றன. எல்லா பெரிய மதங்களும் அந்தக் கொள்கைகளை போதித்துள்ளன. ஆனால் இறைத்தூதர் முஹம்மது மட்டும்தான் அந்தக் கொள்கைகளை உண்மையில் நடைமுறைப்படுத்தியவர் ஆவார். அதன் மதிப்பு எதிர்காலத்தில் சர்வதேச உள்ளுணர்வு முழுக்க விழித்தெழும் வேளையில் முழுமையாக உணரப்படும். இன வேற்றுமைகள் மறையும். வலிமை வாய்ந்த உலக சகோதரத்துவக் கொள்கை நிலை பெறும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Sunday, September 23, 2007

இவை குளிர வைக்கும் குளிர்பானங்களா?

பெப்சி, கோகோகோலா உள்ளிட்ட சில குளிர்பானங்களில் அதிக அளவில் நச்சுப்படிவங்கள் உள்ளதாக தில்லியில் உள்ள அறிவியல் மற்றும் சுற்றுசூழல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பெப்சி உள்ளிட்ட 12 குளிர்பான நிறுவனத் தயாரிப்புகளை உடனடியாக தடை விதிக்க வேண்டும் என்று மக்களவையில் பல உறுப்பினர்கள் வாதிட்டார்கள். இதையடுத்து பெப்சி, கோககோலா பானங்களின் விற்பனை நாடாளுமன்ற வளாக உணவகங்களில் தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் அண்ணபல்கலைக்கழகமும் இந்த முடிவை எடுத்துள்ளது. தொடர்ந்து ஒவ்வொரு மாநில அரசுகளும் மற்றும் மத்திய அரசும் இந்தக் குளிர்பானங்கள் மீதான முழுமையான தடையை விதிக்க பரிசீலித்து வருகின்றன. பெப்சி, கோககோலா உள்ளிட்ட பானங்களில் நச்சுப்படிவங்கள் உள்ளன என்ற குற்றச்சாட்டு பரவலாக ஆரம்பம் முதல் இருந்து வருகிறது. இன்றைய நுகர்வுக் கலாசாரத்தில் இந்தக் குளிர்பானங்கள் சமூக அந்தஸ்த்தின் குறியீடாகவும் மாற்றியமைக்கப்பட்டு புதிய கலாசாரமயமாக்கத்துக்கும் வித்திட்டுள்ளது. ஆனால் இந்தப் பானங்களால் ஏற்படக் கூடிய விளைவுகளை சுட்டிக்காட்டும் போது பலரும் ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டனர். பெப்சி, கோககோலா மட்டுமல்ல தம்ஸ் ஆப், செவன் அப், மிரிண்டா, ஃபேண்டா, லிம்கா என இந்தப் பானங்களின் வரிசை மிகவும் நீளமானது. இந்த நீண்ட வரிசையைப் போலவே இவற்றால் ஏற்படக்கூடிய தீங்குகளும் நீளமானது. ஆனால் இந்தப் பாதிப்புகள் நமக்குத் தெரிவதில்லை. அந்தளவிற்கு இவை மீதான தாக்கம் ஆர்வம் திட்டமிட்டு பரப்பப்பட்டுள்ளது. குறிப்பாக தொடர்பூடகங்கள் இந்தப் பானங்களின் நுகர்வுக் கலாசாரமயமாக்கலின் முதன்மையான இடம் வகிக்கின்றது. செயற்கையாகத் தயாரிக்கப்பட்ட இரசாயன அமிலங்களே இம்மென்பானங்களில் புதுத்துணர்வு தரும் சுவையூட்டிகளாக சேர்க்கப்படுகின்றன. இனிப்புச் சுவையை நிலைப்படுத்துவதிலும் இந்த அமிலங்கள் பயன்படுகின்றன. பொதுவாக மென்பானங்களில் சிட்ரிக் அமிலம் பாஸ்பரிக் அமிலம் சில சமயங்களில் மாலிக் அல்லது தாத்தாளிக் அமிலங்கள்கூட சேர்க்கப்படுகின்றன. இந்த செயற்கை அமிலங்கள் எல்லாமே உடலைப் பாதிக்கக்கூடிய தன்மை வாய்ந்தவை. இந்த அமிலங்கள் பற்களில் பாதுகாப்புப் பூச்சான எனாமலை அரிக்கக்கூடிய தன்மையைக் கொண்டிருக்கின்றன. மென்பானங்கள் குடித்து ஒரு மணிநேரம் வரை இந்த அரிப்பு நீடிக்கலாம். (குடித்தவுடன் பற்கள் கூசுகின்ற சங்கதி இதுதான்) மெனபானங்களின் மூலம் உடலில் சேரும் பாஸ்பரிக் அமிலம் கடைசியில் சிறுநீருடன் வெளியேறும் போது தனியாக வெளியேறுவதில்லை. எலும்புகளிலும் பற்களிலும் இருக்கும் கால்சியத்தையும் பெயர்த்துத் தன்னுடன் சேர்த்துக் கொண்டு போய்விடுகிறது. கால்சியம் போதாத நிலையில் எலும்புகள் பலம்குன்றி கடைசியில் முறியும் நிலைக்கு போய்விடுகின்றன. மென்பானங்கள் எல்லாவற்றிலுமே சர்க்கரை சேர்க்கப்படுகின்றன. உதாரணத்துக்கு 325 மில்லிலிட்டர் பெப்சியில் ஐந்தரை தேக்கரண்டி சர்க்கரை சேர்க்கப்படுகிறது. உலக சுகாதார நிறுவனம் (WHO) நாள் ஒன்றுக்கு ஒருவர் உட்கொள்ள வேண்டிய சர்க்கரையில் அளவு 8 தொடங்கி 11 தேக்கரண்டி அளவு என நிர்ணயம் செய்து வைத்திருக்கிறது. ஒரு நாளில் நாம் அருந்தும் பால், தேநீர் மூலம் நமது உடலில் சேரும் சர்க்கரையின் அளவுடன் மென்பானங்களோடு சேர்ந்து வரும் சர்க்கரையின் அளவையும் கணக்கிட்டால் நிர்ணயித்த அளவைவிட நாம் சாப்பிடும் சர்க்கரையின் அளவு பன்மடங்கு அதிகம் என்பது தெரியவரும். சர்க்கரை அதிக அளவு உடலில் சேருவதை, சர்க்கரை தானே என்று இனிப்பான செய்தியாக எடுத்துக் கொள்ள முடியாது. ஊட்டச்சத்து ஆய்வாளரான விஞ்ஞானி மேஜான் யாட்கின் சர்க்கரையை 'வெள்ளை நச்சு'' என்று வர்ணித்து இருக்கிறார். சர்க்கரையானது பற்களில் பாக்டீரியா கிருமிகள் பெருக வாய்ப்பு அளிப்பதுடன் இதயநோய், தோல்வியாதி போன்றவற்றையும் ஏற்படுத்தும் என நிரூபிக்கப்பட்டுள்ளது. இயற்கைச் சர்க்கரையின் சேதாரம் இவ்வளவு என்றால் சிலவகை பானங்களில் சேர்க்கப்படும் செயற்கை சர்க்கரைகளும் தம்பங்குக்கு தொல்லைகளைத் தருகின்றன. குறைந்த கலோரியைக் கொண்ட டயட் (diet) குளிர்பானங்களில் செயற்கை இனிப்பான அஸ்பாடேம் (Aspaetame) எசல்பேம் (aceslfame) சாக்ரின் (Saccharine) போன்றவை பயன்படுத்தப்படுகின்றன. மிகப் பரவலாக பயன்படுத்தப்படும் அஸ்பாடேம் சர்க்கரையைவிட 200 மடங்கு அதிகான இனிப்பைக் கொண்டதாகும். இவை தலைவலி, ஞாபகமறதி, வயிற்றுபோக்கு, பார்வை மங்கல், குருடு போன்றவற்றை ஏற்படுத்துவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வாஷிங்டன் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஜான் ஒன்லி மிருகங்களின் மீது நடத்திய ஆய்வுகளில் இருந்து அஸ்பாடேம் மூளைப் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய வாய்ப்புகளை கொண்டிருப்பதாகக் குறிப்பிடுகிறார். காபி, தேநீர் போன்றவற்றில் காஃபின் cafein எனும் வேதிப்பொருள் இருப்பது பலரும் அறிந்த ஒன்று. ஆனால் கோககோலா பானத்தின் சுவையை அதிகரிப்பதற்காக காஃபின் பயன்படுத்துவது அதிகம். இது வெளியில் தெரியாத விஷயம். காஃபின் மத்திய நரம்புகளை மிகையாகத் தூண்டிவிடுகிறது. அதிகமான காஃபின் தூக்கமின்மை எரிச்சல், இதயத்துடிப்பு அதிகரிப்பு போன்றவற்றுக்கு வழிகோலிவிடுகிறது. மென்பானங்களில் சேர்க்கப்பட்டிருக்கும் நிறமூட்டிகள் எவை என்பது பற்றி பாட்டில்களில் குறிப்பிடப்படுவதில்லை. ஆனால் பெரும்பாலான சாயங்கள் புற்றுநோய்க்கு காரணமாய் உள்ளன என்பதே உண்மை. தார்ட்ராசின் எனப்படும் ஆரஞ்சு நிற சாயம் தோலில் அரிப்பு எரிச்சல் போன்றவற்றை ஏற்படுத்துவதோடு புற்றுநோய்க்கும் காரணமாகத் திகழ்வதாகக் கருதி இச்சாயத்துக்கு நார்வேயில் தடை செய்யப்பட்டிருக்கிறது. கார்மேசின் (carmoisine) எனப்படும் சிவப்பு வர்ணம் உணவை நஞ்சடையச் செய்வதுடன் புற்றுநோயையும் ஏற்படுத்தலாம் என்று அமெரிக்காவிலும் கனடாவிலும் தடை செய்யப்பட்டிருக்கிறது. சிங்கப்பூர் தனது பத்து ஆண்டு சுகாதார இயக்கத்தின் ஓர் அங்கமாக கோககோலா, பெப்சி போன்றவற்றுடன் சர்க்கரை அதிகம் கொண்ட பல குளிர்பானங்களை 1972ல் இருந்து கல்வி நிறுவனங்களில் விற்பதற்கு தடை செய்திருக்கிறது. சமீபத்தில்கூட பிரான்சில் கோககோலா குடித்த பலருக்கு காய்ச்சல், வாந்தி, தலைவலி ஏற்பட்டதால் பிரான்ஸ் தனது நாட்டில் கோககோலவின் விற்பனைக்கு தடை விதித்துள்ளது. ஆக இந்திய அளவில் கோலா, பெப்சி போன்ற பானங்களுக்கு தடை விதிக்க எடுக்கும் முயற்சி ஒன்றும் புதுமை அல்ல. இவ்வளவு ஆபத்துகளையும் தன்னில் கரைத்துக் கொண்டு வரும் மென்பானங்களை இவ்வளவுநாள் அனுமதித்திருப்பது மோசமானது. இந்த மென்பானங்கள் மீது தடைவிதித்தல் என்பதை பகிரங்கவிவாதப் பொருளாக்க வேண்டும். இவற்றால் விளையும் கேடுகள் பற்றி அறிவுபூர்வமான விழிப்புணர்வு வெகுசன மட்டத்தில் உருவாக்கப்பட வேண்டும். மேலும் உள்ளூர் வளங்களைக் கொண்டு தயாரிக்கும் உள்ளூர் மென்பானங்களில் உற்பத்தியை பெருக்க கொள்கை ரீதியான முடிவுக்கு அரசு முன்வர வேண்டும். மதுசூதனன் தொகுப்பு நன்றி http://www.aaraamthinai.com/sirappuparvai/aug/aug12sirappu.asp